Tuesday, 17 December 2013

கம்பு பிரியாணி

கம்பு பிரியாணி
 
உணவே மருந்து - கம்பு சோளம்போல கம்பும் ஆப்பிரிக்காவில் இருந்து வந்ததுதான். ஆனால், கி.மு. 2500-களிலேயே இங்கு கம்பு பயிரிடப்பட்டு இருந்தது என்பதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. சங்க இலக்கியப் பாடலிலும் சித்த மருத்துவப் பயன்பாட்டிலும் இந்தத் தானியம் இருப்பதே இதன் தொன்மைக்குச் சான்று. அரிசியைக் காட்டிலும், கனிமம், கால்சியம், புரதம், இரும்பு, உயிர்ச் சத்து என அனைத்துச் சத்துகளுமே அதிகம் கொண்ட தானியம் கம்பு !! அரிசியை விட கிட்டத்தட்ட 8 மடங்கு அதிக இரும்புச் சத்து !! கன்னடத்தில், 'பஜ்ரா’ என்று அழைக்கப்படும் இந்தக் கம்பு, கர்நாடகத்திலும் ஒரு சில வட மாநிலங்களிலும் இன்றும் மிகப் பிரபலம். வேகவைக்க கொஞ்சம் மெனக்கெட வைக்கும் இதனை, சாதாரண அரிசிபோல அப்படியே கழுவி வேகவைக்க முடியாது. மிக்ஸியில் ஓர் அடி போட்டு, இரண்டாக உடைத்து, இரண்டு மணி நேரம் ஊறவைத்து, அதன் பின் உலையில் போட்டு வேகவைத்தால்தான் நல்ல குழைவாக வரும். ஆனால், சுவையிலோ, பிற அரிசி வகையறாக்கள் கம்பின் பக்கத்தில் வர முடியாது. அத்தனை அருமையாக இருக்கும். வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் துவங்கிய பெண் குழந்தைகளுக்கும் மாதம் 45 முறை கண்டிப்பாகத் தர வேண்டிய தானியம். பொதுவாக, கம்பு என்றாலே அதனைக் கூழாக, கஞ்சியாகத்தான் சாப்பிட வேண்டும் என்ற நினைப்பு நம்மில் பலருக்கும் உண்டு. 'சிறைக்குப் போனால் கம்பங்களிதான் தின்ன வேண்டும்’ என்பது போன்ற பேச்சுகளும் இதற்குக் காரணம். ஆனால் கஞ்சியாக மட்டும் அல்ல; சாதமாக, அவலாக, பொரியாக... எப்படி வேண்டுமானாலும் கம்பைச் சாப்பிடலாம். அருமையான நாட்டுக் கோழி பிரியாணியோ, ஹைதராபாத் தம் பிரியாணியோகூட கம்பில் செய்து கலக்கலாம். கம்பை இரண்டாக உடைத்து, தண்ணீரில் ஊறவைத்து, அதற்குப் பின் நெல் அரிசியில் எப்படி பிரியாணி செய்கிறீர்களோ அப்படியே செய்ய வேண்டியதுதான். கோழி மீது இரக்கம் உள்ளவர்கள், பீன்ஸ், கேரட், ரொட்டித் துண்டு போட்டு வெஜிடபிள் பிரியாணியும் செய்யலாம். கம்பு ரொட்டி சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். கம்பில் உள்ள லோ கிளைசிமிக் தன்மையாலும், அதில் ஏற்கெனவே உள்ள கூடுதல் நார்ச் சத்தினாலும், காலை/ மதிய உணவில் இதை எடுக்கும்போது பட்டை தீட்டிய அரிசிபோல், கம்பு ரொட்டியும் கம்பஞ்சோறும் பிரச்சனையைத் தராது. அரிசியைப் போல் அல்லாமல், கம்பரிசி, உமி தொலி நீக்கிய பின்னரும் அதன் உள் பகுதியில் அத்தனை நல்ல விஷயங்களையும் தன்னகத்தே வைத்திருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கும் எடை குறைக்க விரும்புவர்களுக்கும் மிக ஏற்றது தவிர, இதில் உள்ள 'அமைலோஸ் அமைலோபெக்டின்’ அமைப்பு நெல் அரிசியைக்காட்டிலும் மாறுபட்டது. இன்னும் இறுக்கமானது. அதனால்தான், சீரணத்துக்கும் கொஞ்சம் தாமதமாகிறது. இந்த அமைப்பினால் மெள்ள மெள்ளவே கம்பின் சர்க்கரையை ரத்தத்தில் கலக்கச் செய்வதால், லோகிளைசிமிக் உணவாக இருந்து சர்க்கரை நோயாளிக்குப் பெரிதும் உதவுகிறது. சத்துச் செறிவு அடர்த்தியாக உள்ள கனத்த உணவு என்பதால், என்னதான் பிடித்த குழம்பை, பிடித்த கையுள்ளவர் பரிமாறினாலும் கம்பு சாதத்தை ஒரு கட்டு கட்ட முடியாது. அளவாகச் சாப்பிடுவதால், எடை குறைக்க விரும்புவோருக்கும் இது ஓர் அற்புதத் தானியம் !! இன்று பலரும், நான் ''டயபடிக் சார். அரிசியே சாப்பிடுறது இல்லே. வெறும் சப்பாத்திதான் மூணு வேளையும்'' என்பார்கள். அது தேவையே இல்லை. சர்க்கரை நோய்க்கான சரியான சிகிச்சையை உங்கள் குடும்ப மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக்கொண்டு, வாரம் இரு நாள் கம்பஞ்சோறு, இரு நாள் புழுங்கல் அரிசிச் சோறு, இன்னொரு நாள் தினை சாதம், இரவில் கேழ்வரகு அடை, எப்போதாவது காலை உணவாக வரகரிசிப் பொங்கல், சோள தோசை, குதிரைவாலி இட்லி என்று சாப்பிடப் பழகினால், சாப்பாத்திக்கு அடிமை வாழ்க்கை வாழ வேண்டிய அவசியம் இல்லை. இப்படிப் பல தானியங்களையும் கலந்து எடுத்துக்கொள்வதுடன் கொஞ்சம் உடல் உழைப்பும் கொடுத்து வாழுங் கள். உங்கள் சர்க்கரை நோய் எப்போதும் கட்டுக்குள்ளேயே இருக்கும். மைசூரில் இயங்கிவரும் மத்திய அரசின் உணவுத் தொழில்நுட்ப உயர் நிறுவனம் (சி.எஃப்.டி.ஆர்.ஐ.) தன் பல ஆய்வுகளில், இந்தச் சிறுதானியங்கள், அரிசி, கோதுமையைக் காட்டிலும் பல வகைகளில் சிறந்தது என்பதையே மீண்டும் மீண்டும் சொல்கிறது. கம்பு சம்பந்தமாகச் சமீபத்தில் படித்த ஓர் ஆச்சர்யமான விஷயம்... செல்கள் பாதுகாப்புக்கு கம்பு உதவும் என்பது. கொஞ்சம் சூட்டு உணவு என்பதால், கம்பு சாப்பிடும்போது குளிர்ச்சிக்கு மோர், சின்ன வெங்காயத்தைச் சேர்த்துக்கொள்வது நல்லது.

முடக்கறுத்தான்

Cardiospermum halicacabum
முடக்கு+அறுத்தான்= முடக்கறுத்தான்

முடக்கறுத்தான்/ முடக்கற்றான்/ முடர்குற்றான்/ மொடக்கொத்தான்

"சூலைப்பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான்
காலைத் தொடுவலியுங் கண்மலமும் - சாலக்
கடக்கத்தானோடிவிடுங் காசினியை விட்டு
முடக்கற்றான் தனை மொழி"
- சித்தர் பாடல்-

கீல்பிடிப்பு, கிரந்தி, கரப்பான், பாதத்தைப் பிடித்த வாதம், மலக்கட்டு அத்தனையும் முடக்கற்றான் உபயோகித்தால் இந்த உலகை விட்டே ஓடிவிடுமாம்.

முடக்கற்றான் கொடிவகையைச் சேர்ந்தது. இது இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது.குளிர்ந்த ஈரச்சத்துள்ள இடத்தில்தான் முடக்கற்றான் பயிராகும்.தோட்டங்கள், வீட்டு வேலி இவைகளிலுள்ள பெரிய செடிகளின்மேல் படர்ந்து வளரும். உஷ்ண பிரதேசங்களில் முடக்கற்றான் கொடியைப் பார்க்கமுடியாது. வளமான இடங்களில் இந்தக் கொடிசற்று பெரிய இலைகளுடன் செழிப்பாகப் படரும். இந்தக் கொடியின்தண்டும் இலைக் காம்பும் மெல்லியதாகவே இருக்கும். இது ஏறுகொடியாக சுமார் 3.5 மீ. அளவு படரும்.

இதன் தண்டு, இலை, காம்பு எல்லாம் நல்ல பச்சை நிறமாகவே இருக்கும். இதன் பூ வெண்நிறமாக இருக்கும். இதன் காய் மூன்று பிரிவாகப் பிரிந்து உப்பலான மூன்று தனித் தனி அறைகளைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வோர் அறையிலும் ஒரு விதை வீதம் ஒரு காயில் மூன்று விதைகள் இருக்கும். காயைப் பறித்துத் தோலை உறித்தால் உள்ளே மிளகளவு, பச்சை நிறமான விதைகள் இருக்கும். அதன் ஒரு பகுதியில் நிலாப்பிறைபோல் ஒரு வெண்ணிறக் குறி தோன்றும்.

இதன் காய் முற்றிய பின் பழுப்பு நிரமாக மாறிக் காய்து விடும். இதை மற்ற கீரைகளுடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம்.இதை தனியாக மருந்தாகவும் பயன் படுத்தலாம்.

இதன் இலையில் அடங்கியுள்ள சத்துக்கள்:

ஈரப்பதம்-83.3, புரதச்சத்து-4.7, கொழுப்புச் சத்து 0.6, மாவு சத்து 9.1, தாது சத்து 2.3, சக்தி-6 கலோரி முதலியவை உள்ளது. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப் படுகிறது.

முடக்கு+அறுத்தான் = முடக்கறுத்தான் / முடக்கற்றான். இது மூட்டுக்களை முடக்கி வைக்கும்மூட்டு வாத நோயை அகற்றுவதால் முடக்கற்றான் எனப்பெயர் பெற்றது.

குழந்தை பிரசவிக்கும் நேரத்தில் ஒரு சில பெண்கள் ரொம்ப கஷ்டப் படுவார்கள் இவர்கள் வேதனையைக் குறைத்து, சுகமாகசுலபமாக பிரசவிக்கச் செய்ய இந்த முடக்கற்றான் நன்கு பயன்படுகிறது.

சுகப்பிரசவம் ஆக:

முடக்கற்றான் இலையைத் தேவையான அளவுகொண்டு வந்து அதைக் காரமில்லாத அம்மியில் வைத்து மை போல்அரைத்து, பிரசவிக்கக் கஷ்டப்படும் பெண்களின் அடிவயிற்றில் கனமாகப் பூசிவிட்டால் கால் மணி நேரத்திற்குள் சுகப் பிரசவம் ஏற்படும். கஷ்டமோ, களைப்போ தோன்றாது. மருத்துவமனை அருகிலில்லாத கிராமங்களில் உள்ள மருத்துவம் பார்க்கும் பெண்களும், பாட்டி மார்களும் இந்த முறையையே கையாண்டு வருகின்றனர். இது கை கண்ட முறையாகும்.

மலச்சிக்கல், வாயு, வாதம், குணமாக:

மூன்று நாட்களுக்கு ஒருமுறை முடக்கற்றான் இரசம் வைத்துச் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு, வாதம்,மலர்ச்சிக்கள் சம்பந்தப் பட்ட எல்லாக் கோளாறுகளும் நீங்கும்.

முடக்கற்றான் இரசம் தயாரிக்கும் முறை:

ஒரு கை பிடியளவுமுடக்கற்றான் இலை, காம்பு, தண்டு இவைகளை ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளரளவு தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி அந்த நீரை மட்டும் வடித்து, சாதாரண புளி இரசம் வைப்பது போல் அந்த நீரில் புளி கரைத்து, மிளகு, பூண்டு,சீரகம் சேர்த்து இரசம் தயாரிக்க வேண்டும்.


பாரிச வாய்வு குணமாக -: கைப்பிடியளவு முடக்கற்றான் இலையைக்கொண்டு வந்து நைத்து ஒரு சட்டியில் போட்டு இதே அளவு வேலிப்பருத்தி இலையையும், சூரத்து ஆவரையிலையையும் இத்துடன் சேர்த்துஇரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக வடிகட்டிக் காலைவேளையில் மட்டும் தொடர்ந்து மூன்று நாட்களுக்குக் கொடுத்து வந்தால்பாரிச வாய்வு குணமாகும். தேவையானால் மூன்று நாட்கள் இடைவெளிவிட்டு, மறுபடி 3 நாளாக மூன்று முறை கொடுத்து வந்தால், பாரிசவாய்வு பூரணமாகக் குணமாகும்.

சுக பேதிக்கு :

ஒரு கைப்பிடியளவு முடக்கற்றான் இலையை ஒருசட்டியில் போட்டு, வெள்ளைப் பூண்டு பற்களில் ஐந்து நைத்துஇதில் போட்டு அரைது தேக்கரண்டி அளவு மிளகை ஒன்றிரண்டாக உடைத்து அதையும் சேர்த்து, இரண்டு டம்ளர் அளவு தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டக் காய்ச்சிய கஷாயத்தை வடிகட்டி விடியற் காலையில் சாப்பிட்டு விட்டால் பலமுறை பேதியாகும். அதிகமான பேதியினால் ஒரு எலுமச்சப் பழசாறு சாப்பிட்டால் பேதி உடனே நின்று விடும். இரசம் சாதம்மட்டும் சாப்பிடலாம். இரவு தேவையான பதார்த்தம் சாப்பிடலாம்.

முடக்கற்றான் இலைகளை எண்ணெயில் இட்டுக் காச்சி மூட்டு வலிகளுக்குப் பூசினால் நீங்கும். இதன் இலையை இடித்துப் பிழிந்துஎடுத்த சாற்றினை இரண்டு துளிகள் காதில் விட்டு வர காது வலி,காதில் இருந்து சீழ் வடிவது முதலியவை நீங்கும்.



முடக்கற்றான் இலையையும், வேரையும் குடி நீரிட்டு மூன்று வேளையாக அறுபது மில்லி வீதம் தொடர்ந்து அருந்திவர நாள்பட்டஇருமல் குணமாகும்.

சில பெண்களுக்கு மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு ஏற்படாது. இவர்கள் முடக்கற்றான் இலையை வதக்கி அடி வயிற்றில் கட்டிவந்தால் மாத விலக்கு ஒழுங்காக வரும்.

முடக்கற்றான் இலையை உலர்த்தி எடுத்த பொடியுடன், சித்திரமூல வேர் பட்டை, கரிய போளம் இவைகளையும் பொடி செய்துகுறிப் பிட்ட அளவு மூன்று நாள் அருந்தி வர மாதவிலக்கு ஒழுங்காக வரும்.

முடக்கற்றான் கொடி மல மிளக்கி செய்கை உடையது. இதன் கொடியைமுறைப்படி குடிநீரிட்டு அத்துடன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்துஅருந்த மலத்தைக் கழிக்கச் செய்யும்.

முடக்கற்றான் வேரை உலர்த்தி பின்னர் முறைப் படி குடி நீர் அருந்திவர நாள் பட்ட மூல நோய் குணமாகும்.

Saturday, 14 December 2013

தினை பொங்கல்

தினை பொங்கல் - செய்முறை

தினை அரிசி மற்றும் பாசி பருப்பு 1 : 1/2 விகிதத்தில் 10 நிமிடங்கள் ஊரவைக்கவும்.
3 கப் தண்ணீர் சேர்த்து 3,4 சத்தம் வரும் வரை குக்கரில் வைக்கவும்.
சத்தம் அடங்கியவுடன் தேவை பட்டால் தண்ணீர் சேர்த்து கிளறவும்.
சிறுது நெய்யில்,கடுகு,சீரகம்,மிளகு,கருவேப்பிலை,முந்திரி, சேர்த்து தாளித்து கொட்டவும்.

தினை வெல்ல அடை

தினை வெல்ல அடை

தேவையான பொருட்கள் :
வருத்து பொடித்த தினை மாவு : 1 கப்
வெல்லம் : 1 கப்
கடலைப்பருப்பு : 1/4 கப்
உளுந்துப்பருப்பு : 1/4 கப்

செய்முறை :

பருப்பு இரண்டையும் 30 நிமிடங்கள் ஊர வைத்து அரைத்து கொள்ளவும்.
தினை மாவை இத்துடன் சேர்க்கவும்.
பொடித்த வெல்லத்தை பாகு காய்ச்சி மாவு கலவையில் சேர்க்கவும்.
தேங்காய் துருவல் சிறிது சேர்த்து அடையாக தட்டவும்.
வெண்ணை தொட்டு சூடாக சாப்பிடவும்.